பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அட்மிரல் ரவீந்திர உதவி?

பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அட்மிரல் ரவீந்திர உதவி: ஆதாரமுள்ளதாக CID தெரிவிப்பு

by Staff Writer 03-04-2019 | 1:47 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபரான லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி தலைமறைவாகியமைக்கு அப்போதைய கடற்படைத்தளபதியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியமைக்கான ஆதாரமுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (3ஆம் திகதி) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சியின் மனைவி மற்றும் இரண்டாம் தாரத்திடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக, குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடற்படை தலைமையகத்திற்குள் முன்னாள் லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாரச்சி தலைமறைவாகியிருந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில், அவருக்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு விசாவைப் பெற்றுக்கொள்வதற்காக, கடற்படை நிதியத்திலிருந்து 5 இலட்சம் ரூபா வழங்கியமை மற்றும் அவர் தலைமறைவாக உதவிபுரிந்த வர்த்தகர் லக்சிறி அமரசிங்கவினால், 5000 அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வங்கி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.