குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளுக்கான குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிப்பு

by Staff Writer 03-04-2019 | 1:35 PM
Colombo (News 1st) வரவுசெலவுத் திட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட இரு அமைச்சுக்களின் ஒதுக்கீடுகளுக்கான குறைநிரப்புப் பிரேரணை இன்று (3ஆம் திகதி) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சமர்ப்பிக்கப்பட்ட மொத்த மதிப்பீட்டின் பெறுமதி 287 பில்லியன் ரூபாவாகும். இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி நேற்று கிடைத்துள்ளது. அதற்கமைய, குறைநிரப்புப் பிரேரணை, பாராளுமன்ற நிதிக் குழுவிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அதேபோல மேல் மாகாணம் மற்றும் பெருநகரம் அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போது, அதில் சில ஒதுக்கீடுகளுக்கு கடந்த 31 ஆம் திகதி வாக்கெடுப்பு கோரப்பட்டது. இதன்போது குறித்த ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.