போதைப்பொருள் விசாரணைகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்

போதைப்பொருள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல்

by Staff Writer 02-04-2019 | 11:35 AM
Colombo (News 1st) போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அரசின் அனைத்து சட்டத்தரணிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கைப்பற்றப்பட்டு பாதுகாப்புப்பிரினரிடம் காணப்படும் போதைப்பொருளை அழிக்கும் நோக்குடன் இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் பணியகம் 4 சந்தர்ப்பங்களில் கைப்பற்றிய 769 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கெய்ன் நேற்று அழிக்கப்பட்டது. களனி கோனவல பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் ஜனாதிபதி முன்னிலையில் இவை பகிரங்கமான அழிக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி ஒருகொடவத்தையில் 301 கிலோகிராம் 235 கிராம் கொக்கெய்ன், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி மற்றும் 24 ஆம் திகதி களனி மற்றும் ஒருகொடவத்தை சுங்கப் பிரிவினால் 250 கிலோகிராம் 794 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் 216 கிலோ 435 கிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டிருந்தது. இவ்வாறு கைப்பற்ற கொக்கெய்ன் கொழும்பு மற்றும் கல்கிஸை பிரதம நீதிபதிகளின் பூரண கண்காணிப்பில் அழிக்கப்பட்டது. அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.