கணக்காய்வாளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கணக்காய்வாளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 02-04-2019 | 5:35 PM
Colombo (News 1st) 120 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கணக்காய்வாளர் ஒருவருக்கு 37 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். பிரதிவாதிக்கு 40 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் களனி அலுவலகத்தின் முகாமையாளரின் கையொப்பத்தை போலியாக இட்டு, 57 காசோலைகளூடாக 120 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த கணக்காய்வாளர் குற்றவாளியாக நிரூபணமாகியுள்ளார். சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு மேலதிகமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 130 இலட்சம் ரூபா நட்டஈட்டையும் செலுத்துமாறு குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இழப்பீடு மற்றும் அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 23 வருடங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.