உரிமையாளர் இல்லாத நிறுவனத்திற்கு அரசாங்கம் 500 ஏக்கர் காணியை வழங்கியுள்ளது: நாமல் ராஜபக்ஸ குற்றச்சாட்டு

by Bella Dalima 02-04-2019 | 9:07 PM
Colombo (News 1st) எண்ணெய் சுத்திகரிப்பு திட்டம், சீமெந்து தொழிற்சாலை , வொக்ஸ்வேகன் தொழிற்சாலை மற்றும் முறிகள் மோசடி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் மீண்டும் கவனத்திற்கொள்ளப்பட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முதலீட்டாளர் என அரசாங்கம் கூறும் இந்திய அரசியல்வாதியின் மனைவிக்கு கடன்களே உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். மேலும், குறித்த இந்திய அரசியல்வாதியும் அவரின் மனைவியும் அரசாங்கம் கூறும் நிறுவனத்தில் இருந்து இராஜினாமா செய்துவிட்டதாக பாராளுமன்றில் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஸ, உரிமையாளர் இல்லாத நிறுவனம் ஒன்றுக்கு 500 ஏக்கரை ஹம்பாந்தோட்டையில் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். உலக வரலாற்றில் முதற்தடவையாக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு முதலீடுகளைத் தேடுவதற்காக அரசாங்கம் உலகை சுற்றிச் செல்வதாகவும் நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மலிக் சமரவிக்ரம, இந்திய முதலீட்டாளரின் சொத்துக்கள் 7 பில்லியன் டொலர்கள் என குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்து கொண்டு வந்த 1119 மில்லியன் டொலர்கள் மாத்திரமே இந்த அரசாங்கம் கொண்டு வந்த ஒரே ஒரு முதலீடு என ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். மத்திய வங்கி மோசடி மூலம் சூறையாடப்பட்ட பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை இடம்பெறுவதாகவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய முதலீடு கறுப்பு பணத்தை தூய்தாக்கும் முயற்சி எனவும் டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். மேலதிக தகவல்களை காணொளியில் காண்க...