by Staff Writer 02-04-2019 | 7:08 AM
Colombo (News 1st) முன்னறிவித்தல் இன்றி மின்சார விநியோகத்தைத் துண்டித்து இலங்கை மின்சார சபை மின்சார சட்டத்தை மீறியுள்ளதாக, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் நாம் வினவியபோது, இது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என சபையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி கட்டமைப்பின் சமநிலையைப் பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கையை எடுக்கவேண்டி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நிலவும் நெருக்கடி நிலை இம்மாதத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசர மின் கொள்ளளவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மின்சார விநியோகம் துண்டிக்கப்படுகின்ற காலப் பகுதியில் ஏற்படுகின்ற நட்டத்திற்காக நட்டஈடு செலுத்த வேண்டும் என கூறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சென்று தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, சட்ட ஆலோசனைபெற்று பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.