சாரதியிடம் மன்னிப்பு கோரினார் திமுத் கருணாரத்ன

விபத்துக்குள்ளான சாரதியிடம் மன்னிப்பு கோரினார் திமுத் கருணாரத்ன

by Staff Writer 01-04-2019 | 9:06 PM
Colombo (News 1st) மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்து கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் இன்று (முதலாம் திகதி) உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, அவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமான இடைநிறுத்தி மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு வழங்கப்படுமானால் வழக்கைத் தொடர்ந்தும் நடாத்திச் செல்வதற்கான அவசியம் இல்லை என பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்ததுடன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் மற்றும் முறைப்பாடு செய்வதற்காக வழக்கு அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திமுத் கருணாரத்ன இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டதுடன், விபத்துக்குள்ளான சாரதியிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அதில் தெரிவித்திருந்தார். சுமூகமான முறையில் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டமை தொடர்பிலும், சிகிச்சைபெற்று அவர் வீடுதிரும்ப சந்தர்ப்பம் கிடைத்தமை தொடர்பிலும் தாம் மகிழ்ச்சியடைவதாக திமுத் கருணாரத்ன அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ள அவர், தமது செயற்பாடு தொடர்பில் நன்கு புரிந்துகொண்டுள்ளதாகவும் ​தேசிய மட்டத்திலுள்ள கிரிக்கெட் வீரர் ஒருவரினால் இவ்வாறான செயற்பாடு இடம்பெற்றிருக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். தமது செயற்பாடு தொடர்பில் கவலையடைவதாகவும் திமுத் கருணாரத்ன வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.