விசாரணைக்கு சர்வதேச புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பு

ஈரானிய பிரஜைகள் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பு

by Staff Writer 31-03-2019 | 7:31 AM
Colombo (News 1st) காலி கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செய்மதி தொலைபேசி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச புலானய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது. அதேநேரம், செய்மதி தொலைபேசிக்குக் கிடைத்த அழைப்புகள், குறித்த தொலைபேசியிலிருந்து தொடர்புகொண்ட அழைப்புகள் குறித்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த கடத்தல்காரர் யார் என்பது தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து, பாகிஸ்தானிலுள்ள ஈரானிய பிரஜை ஒருவரே இந்த கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் நடவடிக்கையானது, நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. இதன்படி, பல்வேறு குழுக்களினால் கடல்மார்க்கமாக போதைப்பொருள் கடத்தல் இடம்பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி காலி கடற்பிராந்தியத்தில் 1,072 மில்லியன் ரூபா பெறுமதியான 107 கிலோ 22 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.