50 ரூபா சம்பள அதிகரிப்பு காலை உணவிற்கே போதாது

50 ரூபா சம்பள அதிகரிப்பு ஒருவரின் காலை உணவிற்கே போதாது: ஆனந்தசங்கரி அறிக்கை

by Staff Writer 30-03-2019 | 4:06 PM
Colombo (News 1st) தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கியதனூடாக அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என அரசாங்கம் கருதுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணம் ஒருவரின் காலை உணவிற்கே போதாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், வறுமையை முற்றுமுழுதாக ஒழிப்பதே அரசின் கடமை எனவும் கூறியுள்ளார். வறுமையோடு போராடுகின்ற மக்களுக்கு மத்திய அதிவேக வீதி தேவைப்படுவதில்லை எனவும் வீ.ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே நாடு பெருமளவு கடனாளியாகவுள்ள நிலையில், புதிதாக ஒரு பில்லியன் டொலர் கடன் பெறவுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த ஆலோசனையின் சூத்திரதாரி யார் ஜனாதிபதியிடமோ, அமைச்சரவையிலோ, பாராளுமன்றத்திலோ இதற்கான அனுமதி பெறப்பட்டதா, கடனை மீள செலுத்துவதற்கான ஏற்பாடுகள் என்ன எனவும் வீ.ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார்.