பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியும் - சி.வி.விக்னேஷ்வரன்

by Staff Writer 30-03-2019 | 5:30 PM
Colombo (News 1st) நீதியரசர் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவை உதாரணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றத்தினை அமைக்க முடியும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், வௌிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என்ற அரசாங்கத்தின் கூற்று பொருத்தமற்றது என நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பி.என்.பகவதி தலைமையில் 16 மனித உரிமை மீறல் சம்பங்களை விசாரணை செய்யும் உடலகம ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்கு அமைத்த முன்னணி நபர்களைக் கொண்ட சர்வதேச சுயாதீனக் குழுவை உதராணமாகக் கொண்டு கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதிகளின் உள்ளடக்கம் எவ்வாறு மனித உரிமை மீறல் பொறிமுறைகளில் சர்வதேச தரத்தையும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பத்தன்மையையும் ஏற்படுத்தும் என்பதற்கு நீதியரசர் பகவதி குழு ஒரு சிறந்த உதாரணமாகும். இலங்கை அரசாங்கத்தின் உடலகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச தராதரம், வௌிப்படைத்தன்மை இன்றி நடைபெற்றது என்று கூறி ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதை தவிர்க்கும் வகையில், ஒரு வருட காலத்தின் பின்னர் சர்வதேச சுயாதீன குழுவை நீதியரசர் பகவதி கலைத்தமையானது ஏன் உள்நாட்டு இலங்கைக்கு பொருத்தமற்றது என்பதற்கான சிறந்த உதாரணம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.