ஹெரோயினுடன் கைதான 9 ஈரானியர்களுக்கு விளக்கமறியல்

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் பிரஜைகளுக்கு விளக்கமறியல்

by Staff Writer 29-03-2019 | 3:39 PM
Colombo (News 1st)  நாட்டின் தெற்கு கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜைகள் 9 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன விளக்கமறியல் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். ஈரானிலிருந்து கப்பல் ஒன்றில் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள், அங்கிருந்து சிறிய படகொன்றினூடாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சந்தேகநபர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் பயணித்த படகில் பொருத்தப்பட்டுள்ள ஜீ.பி.எஸ் இயந்திரத்தை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், போதைப்பொருள் கடத்தப்பட்ட படகை கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தெற்கு கடற்பிராந்தியத்தில் கடந்த 24 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 ஈரான் பிரஜைகள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.