மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

by Staff Writer 29-03-2019 | 3:33 PM
Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 71.66 வீதமானோர் உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டார். கடந்த வருடம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது இந்தப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விஷாகா மகளிர் கல்லூரி மாணவி நிலங்கா திசிவரி வருஷவித்தான அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். மூன்று மாணவிகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் 69.34 வீதமும் வவுனியா மாவட்டத்தில் 68.28 வீதமும் யாழ். மாவட்டத்தில் 67.02 வீதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 .4 வீதமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 வீதமும் மாணவர்கள் பரீட்சையில் சித்தி எய்தியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 வீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.51 வீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 53.17 வீதமுமான அடைவுமட்டம் காணப்படுகின்றது. இதேவேளை, மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தில் 63.67 வீதமும் கண்டி மாவட்டத்தில் 72.09 வீதமும் மாத்தளை மாவட்டத்தில் 69.6 வீதமும் அடைவு மட்டம் எட்டப்பட்டுள்ளது. ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் 70.88 வீதமும், மொனராகலை மாவட்டத்தில் 65.79 வீதமும் அடைவு மட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் 73.19 வீதமும், கேகாலை மாவட்டத்தில் 73.99 வீதமும், அடைவு மட்டம் பதிவாகியுள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 77.73 வீதமும் புத்தளம் மாவட்டத்தில் 70.74 வீதமும் அடைவு மட்டம் எட்டப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.