HIV-யால் பாதிக்கப்பட்டவர் சிறுநீரக தானம்

உலகில் முதன்முறையாக HIVயால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சிறுநீரக தானம் பெற்று மற்றொருவருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

by Bella Dalima 29-03-2019 | 4:10 PM
உலகில் முதன்முறையாக HIVயால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து சிறுநீரக தானம் பெற்று மற்றொருவருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை உலகில் முதன்முறையாக HIVயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து சிறுநீரகத்தை தானமாகப் பெற்று இன்னொருவருக்குப் பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்கா - மேரிலாண்டில் பல்டிமோர் (Baltimore) நகரத்தில் உள்ள ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் (Johns Hopkins) வைத்தியசாலையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. HIVயோடு வாழும் ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய அனுமதிக்கப்பட்டது உலகில் இதுவே முதன்முறையென வைத்தியர் டொரி செஜெவ் (Dorry Segev) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. HIV பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமென முன்னதாக கருதப்பட்டு வந்த போதிலும், தற்போது புதிய வகை Antiretroviral மருந்துகள் மூலமாக இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியுமெனவும், இவை சிறுநீரகத்திற்கு பாதுகாப்பானவையாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சை HIV குறித்த மக்களினுடைய எண்ணங்களை மாற்றுமெனவும் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை வௌிக்காட்டுகிறதெனவும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் வைத்தியசாலையின் மருத்துவம் மற்றும் புற்றுநோயியற்துறை இணை பேராசிரியர் கிறிஸ்டின் டுரண்ட் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமையன்று இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அட்லான்டாவைச் சேர்ந்த 35 வயது நினா மார்ட்டினெஸ் ''நன்றாக இருக்கிறேன்'' என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 'கிரே அனாடமி' எனும் தொலைக்காட்சி தொடரின் ஒரு அத்தியாயத்தை பார்த்த பிறகு சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவெடுத்ததாகவும், மருத்துவ உலகில் முதன்முறையாக இந்த அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக இருந்தது உற்சாக உணர்வைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுநீரகத்தை தானாமாகப் பெற்றவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், சிகிச்சை பெற்ற நபர் நலமாக உள்ளதாக தகவல் வௌியிடப்பட்டுள்ளது.