2020 ஆம் ஆண்டில் நாட்டைப் பொறுப்பேற்கவுள்ளவர் புரட்சிகர மாற்றத்தை செய்ய நேரிடும்: ஜனாதிபதி

by Bella Dalima 28-03-2019 | 8:45 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டு நாட்டைப் பொறுப்பேற்கவுள்ளவர் எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கருத்து வௌியிட்டார். எத்தகைய வீரன் ஒருவன் 2020 ஆம் ஆண்டில் நாட்டைப் பொறுப்பேற்றாலும் மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தை நாட்டில் செய்ய நேரிடும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், அவ்வாறான புரட்சிகர மாற்றம் ஒன்று இடம்பெறாவிட்டால் நாடு இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும் எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். முக்கிய சில திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் காணப்படுகின்ற ஊழல் முறைகேடுகள், மோசடிகள் காரணமாக வரவு செலவு பற்றாக்குறையை ஈடு செய்வது கடினமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மோசடிப் பணத்தை மீளப் பெறுவதற்காக எந்தவொரு அரசாங்கமும் அந்நிறுவனங்கள் மீது கை வைப்பதில்லை என கூறிய ஜனாதிபதி, அந்நிறுவனங்கள் இரண்டு நாட்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் முழு நாடும் சீர்குலையும் என தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் 35 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். இக்கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகக் கலையரங்கில் நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் கலந்து கொண்டிருந்தனர்.