மின்சாரப் பிரச்சினை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ, சந்திரிக்கா கருத்து

by Bella Dalima 28-03-2019 | 7:55 PM
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டில் நிலவும் மின்சாரப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர். தமது காலத்தில் மாத்திரமே சிக்கல் இன்றி மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முடிந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். 2015, 2017 ஆம் ஆண்டுகளில் சம்பூரில் அமைக்கப்படவிருந்த மின் உற்பத்தி நிலையங்களை தற்போதைய அரசாங்கம் அமைக்காததன் பிரதிபலனையே இன்று எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இதேவேளை, தமது காலத்தில் பல மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பித்த போதும், தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிழித்து எறிந்த ராஜபக்ஸ அரசாங்கம், கைச்சாத்திட்டத்தை விட இரண்டு மடங்கு செலவில் நுரைச்சோலைக்கு கைச்சாத்திட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டார். நுரைச்சோலையைத் தாம் சீனாவின் சிறந்த கம்பனிக்கே வழங்கியதாகவும் அதிக தரகுப் பணம் கேட்டமையினால், அரசாங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் அந்நிறுவனத்தை மூடிக்கொண்டு சென்றதாகவும் சந்திரிக்கா மேலும் குறிப்பிட்டார். பின்னர் இரண்டு சதத்திற்கும் உதவாத சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு அதனை வழங்கியதால், 38 தடவைகள் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீர்குலைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய செய்திகள்