பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள் போராட்டம்

பருத்தித்துறை நகரசபை பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

by Staff Writer 28-03-2019 | 6:46 PM
Colombo (News 1st) யாழ். பருத்தித்துறை நகரசபை பொதுச்சந்தை மரக்கறி வியாபாரிகள் இன்று வியாபாரத்திலிருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பொதுச்சந்தை கட்டடத்தொகுதியின் மேற்தளத்திலேயே மரக்கறி வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுச்சந்தைக்கு சுமார் 50 மீட்டர் தூரத்திலுள்ள மீன் சந்தைக்கு அருகில் சில மரக்கறி வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தமக்கு தேவையான மரக்கறிகளை அங்கேயே கொள்வனவு செய்வதால், பொதுச்சந்தையின் மேற்தளத்திலுள்ள தமது கடைகளில் வியாபாரம் நடைபெறுவதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். சந்தையின் கீழ் தளத்திற்கு தமது வர்த்தக நிலையங்களை மாற்றுமாறு வியாபாரிகள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்த போதிலும், அதற்கான அனுமதியை நகரசபை இதுவரையில் வழங்கவில்லை என வியாபாரிகள் குறிப்பிட்டனர். தமது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைக்காக செலுத்தும் வரியை வியாபாரிகள் வழங்காதுள்ளதுடன், மீன் சந்தைக்கு அருகிலுள்ள மரக்கறி வியாபார நிலையங்களை அங்கிருந்து அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை பருத்தித்துறை நகர சபை செய்ய மறுத்ததை அடுத்து இன்று வியாபாரிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.