6 வயது பெண் குழந்தை வன்கொடுமை செய்து கொலை

கோயம்புத்தூரில் 6 வயது பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை

by Bella Dalima 28-03-2019 | 5:15 PM
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே 6 வயது பெண் குழந்தை தொடர்ச்சியாக பல நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. சிறுமி கொல்லப்படுவதற்கு முன்பே பல நாட்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். துடியலூர் அருகே பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூரில் 6 வயதுப் பெண் குழந்தை கடந்த திங்கட்கிழமை காணாமற்போனது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டின் அருகிலேயே உடலில் காயங்களுடன் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை நிறைவடைந்ததும், குழந்தையின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்தனர். மேலும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி அப்பகுதி மக்கள் துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இவ்வழக்கில் பொலிஸாரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினர். ஆனால், அதில் சமரசம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு கூடுதல் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். மேலும், கோவை வடக்கு கோட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, வெள்ளிக்கிழமை மாலைக்குள் வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் 4 மணி நேர மறியல் போராட்டம் பிற்பகல் 1 மணியளவில் கைவிடப்பட்டது. பின்னர், குழந்தையின் உடலை தாய் வனிதா பெற்றுக்கொண்டார். பின்னர் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.