வசந்த கரன்னாகொடவிடம் 4 தடவைகள் வாக்குமூலம் பதிவு

11 இளைஞர்கள் கடத்தல்: அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் நான்கு தடவைகள் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 27-03-2019 | 5:45 PM
Colombo (News 1st) 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் நான்கு தடவைகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 4 ஆம் திகதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் இன்று தெரிவித்தது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் அட்மிரல் வசந்த கரன்னாகொட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி, அவ்வேளையில் பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அனுர சேனாநாயக்கவிற்கு முறைப்பாடு செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. அவ்வேளையில் கடற்படையின் உறுப்பினர்களினால் இந்த 11 இளைஞர்களும் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவத்தை வசந்த கரன்னாகொட அறிந்திருந்ததாக திணைக்களம் தெரிவித்தது. கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் ஆனந்த குருகே வழங்கிய வாக்குமூலம் ஊடாக அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் இரண்டு லெப்டினன்ட் கமாண்டர்கள் உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கின் ஏனைய சந்தேகநபர்களாக கொமடோர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களையும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.