வழக்கை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிக்க தடை

வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிக்கத் தடை

by Bella Dalima 27-03-2019 | 4:37 PM
அக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் அவர் நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக பாபி சிம்ஹா முறைப்பாடொன்றை முன்வைத்தார். ''நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பேசவே இல்லை. எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள்,'' என அவர் குறிப்பிட்டார். படக்குழுவினர் மீது நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். அக்னிதேவி படம் கடந்த வாரம் வௌியானது. பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பாபி சிம்ஹா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாபி சிம்ஹா மற்றும் அக்னி தேவி படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்பிற்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த கூட்டத்தின் போது, படத்தின் மீது பாபி சிம்ஹா தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அவர் ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இவற்றில் எதற்கும் ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறியுள்ளார். இந்நிலையில், அடுத்த வாரத்தில் மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவழைத்து ஆலோசிக்கவுள்ளார்கள்.