ஜெனிவா பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி கையொப்பமிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு

by Bella Dalima 27-03-2019 | 8:09 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி, இலங்கை தூதுவர் கையொப்பமிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மீகஹதென்ன பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா கொண்டு வந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியதுடன், அப்பிரேரணை கடந்த வாரம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மனித உரிமை பேரவையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் காணப்படும் சரியான விடயங்களை ஏற்றுக்கொள்வதைப் போன்று, அதில் காணப்படும் பிழையான விடயங்களை அரசாங்கம் என்ற வகையில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பபட்டுள்ளது. ஆகவே, காணிகளை விடுவிப்பதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு மனித உரிமை ஆணையாளர் கேட்டுள்ளார். அவர் இவ்வாறான கருத்துக்களைக் கூறுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களினால் அவருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களே காரணம் என நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார். வௌிநாட்டு நீதிபதிகளை அழைத்து வந்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இணை அனுசரணை வழங்கும் கொள்கைக்கு பெப்ரவரி 25 ஆம் திகதி ஜெனிவாவிலுள்ள இலங்கையின் தூதுவர் கையொப்பமிட்டுள்ளார். எனினும், தனக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்காமலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதுடன் நாட்டின் வௌிவிவகார அமைச்சிற்கும் அது தெரியாது என ஜனாதிபதி மேலும் கூறினார். நாட்டின் வௌிநாட்டுக் கொள்கை, சர்வதேச உறவுகள் தொடர்பிலான பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றதே தவிர, கீழ் மட்டத்தில் இருக்கும் எவருக்கும் இல்லை என்பதால், இவ்விடயத்திற்கு தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.