குடு ரொஷானின் மனைவி 'அருனி பபா' கைது

குடு ரொஷானின் மனைவி 'அருனி பபா' கைது

by Staff Writer 27-03-2019 | 1:45 PM
Colombo (News 1st) சிறைச்சாலைக்குள் இருந்து ஹெரோயின் கடத்தல்களை வழிநடத்திய மட்டக்குளி, குடு ரொஷான் என்பவரின் மனைவி அருனி பபா (30 வயது) மற்றும் தெல்சூட்டி எனப்படும் சாலிந்த தர்மசிறி ஆகியோர் ஹெரோயின் மற்றும் 17 இலட்சத்துக்கும் அதிக பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி மட்டக்குளி பகுதியில் சூட்டி உக்குன் என அழைக்கப்படுபவர் உள்ளிட்ட ஐவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். குடு ரொஷான் தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் சிறைச்சாலைக்குள் இருந்து தனது மனைவியுடன் இணைந்து ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இதற்கிணங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மட்டக்குளி சமித்திபுர பகுதியில் வைத்து அருனி பபா என்றழைக்கப்படும் சந்தேகநபரை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் வசமிருந்த 3 கிராம் ஹெரோயின் மற்றும் 10 இலட்சத்துக்கும் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் ராகம தலகொல்ல பகுதி மற்றும் கடவத்த பகுதிகளில் உள்ள இரு வீடுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது, கடவத்தையில் உள்ள வீட்டிலிருந்து 46 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய தஹம்புர பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 100 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் மற்றும் 7 இலட்சம் ரூபா பணம் பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.