முல்லைத்தீவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாயம்

by Staff Writer 26-03-2019 | 8:39 PM
Colombo (News 1st) முல்லைத்தீவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவின் மாங்குளம், முள்ளியவளை, பூதன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய செய்கைகளுக்கு சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள தோட்டங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறப்பட்டு நீர் பம்பிகளை இயக்கி நீர் இறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட 10 விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 370,000 ரூபா செலவிலான இந்தத் திட்டத்திற்கு அரைவாசி கட்டணமாகிய 185,000 ரூபாவினை விவசாயத்திணைக்களம் செலுத்துகின்றது. எஞ்சிய தொகையை தவணை முறையில் விவசாயிகள் செலுத்த வேண்டியுள்ளது. சூரிய சக்தியை பயன்டுத்துவதால் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். முதற்கட்டமாக 10 பேருக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட்டதாகவும் இதனை விஸ்தரிக்கவுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் உ. குகநாதன் குறிப்பிட்டார். மின்சாரத்திற்காக விவசாயிகள் ஆரம்பத்தில் அதிகக் கட்டணத்தினை செலுத்தியதாகவும் 10,000 ரூபா வரை செலவிட்டதாகவும் குறிப்பிட்ட உ. குகநாதன், தற்போது அவர்கள் ஒரு சதம் கூட மின் கட்டணம் இல்லாது வருமானத்தினை ஈட்டுவதாக சுட்டிக்காட்டினார்.