தேர்வுகள் திறமை அடிப்படையில் இடம்பெற வேண்டும்

முகாமைத்துவ உதவியாளர் தேர்வுகள் திறமை அடிப்படையில் இடம்பெற வேண்டும்: திருமலை மேல் நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 26-03-2019 | 10:35 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தேர்வுகள் திறமை அடிப்படையில் இடம்பெற வேண்டும் என திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விகிதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், திறமை அடிப்படையில் அவை மறுக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு நீதியை வழங்குமாறு கோரியும் பாதிக்கப்பட்ட இருவரால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் தெரிவிற்கான பரீட்சைகள் இடம்பெற்றதாகவும், திறமை அடிப்படையில் தாங்கள் சித்தியடைந்த போதிலும், தங்களை நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கவில்லை எனவும் தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன விகிதாசார அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறுவதாகவும் சட்டத்திற்கு முரணாக நடைபெறும் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி, தங்களுக்கு நீதி வழங்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இன விகிதாசார அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். இன விகிதாசார அடிப்படையிலான தெரிவானது இலங்கை அரசியல் அமைப்பின் 12 ஆம் சரத்திற்கமைய சட்டத்திற்கு முரணானது மட்டுமன்றி, இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்புகளுக்கும் முரணானாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பரீட்சை பெறுபேறுகள் கொண்ட அனைத்து ஆவணங்களையும், திறமை அடிப்படையில் தெரிவாகியவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடத்தி, அதன் அடிப்படையில் நியமனம் செய்வதற்கான இறுதி அறிக்கையையும் எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் இதன்போது நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.