போதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்

போதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்: மின்சார சபை அறிவிப்பு

by Staff Writer 26-03-2019 | 7:00 PM
Colombo (News 1st) மத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தனியார் துறையிடம் இருந்து அவசர மின்சாரக் கொள்வனவை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் நாளாந்த மின்சாரத்திற்கான கேள்வி 47 கிகாவாட் மணித்தியாலம் வரை அதிகரித்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலையும் மின்சாரத்திற்கான கேள்வி அதிகரிப்பதற்கு காரணமாகும். இதனால் வழமையான நாளாந்த கேள்வியை விட 4 கிகாவாட் மணித்தியால மின்சாரம் மேலதிகமாக தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தி 5 கிகாவாட் மணித்தியாலம் வரை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்தியில் 38 கிகாவாட் மணித்தியாலங்கள் வரை அதிகரித்தாலும் நாளாந்தம் சுமார் 4 கிகாவாட் மணித்தியால பற்றாக்குறை நிலவுவதாக மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.