by Staff Writer 26-03-2019 | 4:29 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான நாலக்க டி சில்வா சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சிறைச்சாலைகள் அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால், சந்தேகநபர் இன்று மன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
எனினும், அடுத்த வழக்கு விசாரணையின் போது அவரை மன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பான குற்றச்சாட்டிற்குத் தேவையான போதிய சாட்சியங்கள் இல்லை என அறிவித்து, பிணையில் செல்வதற்கு தமது கட்சிக்காரருக்கு அனுமதி வழங்குமாறு சந்தேகநபரான நாலக்க டி சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி அஜித் பத்திரண மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான், பிரதிவாதி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் 9 ஆம் திகதி அறிவிக்க தீர்மானித்துள்ளார்.