IPL Match: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

by Staff Writer 26-03-2019 | 8:33 AM
Colombo (News 1st) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜொஸ் பட்லரின் ஆட்டமிழப்பு தொடர்பில் அதிகம் விவாதிக்கப்படுகின்றது. ஜெய்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் சார்பாக கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 79 ஓட்டங்களை விளாசினார். போட்டியில் கிறிஸ் கெய்ல் 6 ஓட்டங்களை பெற்றபோது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ஓட்டங்களை கடந்த வீரராக பதிவாகினார். இதற்கு முன்னர் டேவிட் வோர்னர் இந்த மைல்கல்லை எட்டியிருந்ததுடன், அவர் 114 இன்னிங்ஸ்களில் 4000 ஓட்டங்களை குவித்திருந்தார். கிறிஸ் கெய்ல் 112 இன்னிங்ஸ்களில் 4000 ஓட்டங்களை குவித்துள்ளார். மத்தியவரிசையில் சர்ப்பராஸ் கான் 46 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக ஜொஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ஓட்டங்களை விளாசி வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார். எனினும், அவர் 12 ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வினினால் மன்கட் முறையில் ஆட்டமிழப்பு செய்யப்பட்டார். 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் மன்கட் முறையில் வீரர் ஒருவர் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பமாக இது பதிவானது. 2014 ஆம் ஆண்டு இலங்கை அணியின் சச்சித்ர சேனாநாயக்க மன்ட் முறையில் அதே ஜொஸ் பட்லரை ஆட்டமிழக்க செய்திருந்திருந்தார். ஜொஸ் பட்லரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. இறுதி 7 விக்கெட்களும் 56 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு தடைக்கு பின்னர் சர்வதேச அரங்கிக்கு திரும்பிய ஸ்டீவன் ஸ்மித் 20 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் ​ரோயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.