இராணுவத்திடம் சரணடைந்தோர் பதிவு அரசிடம் இருந்தது

இராணுவத்திடம் சரணடைந்தோர் தொடர்பான ஆவணப் பதிவு கடந்த அரசிடம் இருந்தது: மாவை சபையில் தெரிவிப்பு

by Bella Dalima 26-03-2019 | 8:14 PM
Colombo (News 1st) இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் சரணடைந்தவர்களின் பதிவுகள் அடங்கிய ஆவணம் கடந்த அரசாங்கத்திடம் இருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2011, 2012 ஆம் ஆண்டுகளில் அந்நாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் பேசிய போது, சிறையில் அடைக்கப்பட்டவர்கள், விடுதலை செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான 7 அல்லது 8 கோவைகள் தமக்கு காண்பிக்கப்பட்டதாக மாவை சேனாதிராசா சபையில் குறிப்பிட்டார். சில நாட்களின் பின்னர், அவர்களை வவுனியா முகாமிற்கு சென்று சுமந்திரனும் சுரேஷ் பிரேமச்சந்திரனும் பார்க்கலாம் என பசில் ராஜபக்ஸவும் அரசாங்கமும் கூறியிருந்தாலும், அங்கு சென்ற போது இராணுவத்தினர் தடுத்து விட்டதாக மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார். அக்காலகட்டத்தில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் சரணடைந்தவர்களின் பட்டியல் அரசாங்கத் தரப்பிலும் இராணுவத் தரப்பிலும் இருந்ததாக சுட்டிக்காட்டிய மாவை சேனாதிராசா, அவர்களின் நிலை என்னவானது என்பதையே மக்கள் கோரி நிற்பதாகவும் குறிப்பிட்டார்.