நிதி பரிமாற்றத்திற்கு பென்டகன் அங்கீகாரம்

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லைச்சுவர்: நிதி பரிமாற்றத்திற்கு பென்டகன் அங்கீகாரம்

by Staff Writer 26-03-2019 | 12:52 PM
Colombo (News 1st) அமெரிக்க - மெக்ஸிக்கோ எல்லைச்சுவர் அமைப்பதற்காக, ஒரு பில்லியன் டொலர் நிதியை பரிமாற்றுவதற்கு அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய எல்லைச்சுவரின் கட்டுமானப் பணிகளுக்காக, குறித்த நிதியை இராணுவ பொறியியலாளர்களுக்கு பரிமாற்றுவதற்கு இராணுவத் தலைமையகமான பென்டகன் அங்கீகாரமளித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸின் தடைகளை மீறி குறித்த தடுப்புச்சுவர் அமைப்பதற்கான நிதியைப் பெறுவதற்கு, நாட்டில் அவசரகால நிலையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியதன் பின்னர் பெற்றுக்கொள்ளப்படும் முதலாவது நிதியாக இது அமைந்துள்ளது. இதனிடையே, பென்டகனின் இந்த நகர்விற்கு ஜனநாயகக் கட்சியினர் தமது எதிர்ப்பினை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கீகரிக்கப்பட்ட இந்த நிதியினைக்கொண்டு 91 கிலோமீற்றர் தூரம்கொண்ட தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்படவுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், சுங்கம் மற்றும் எல்லை ரோந்து நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திட்டமிட்டு நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவை அமெரிக்க இடைக்கால பாதுகாப்புச் செயலாளர் பட்றிக் ஷனஹன் (Patrick Shanahan) வழங்கியதாக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிதிப்பரிமாற்றம் தொடர்பில் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்துவதற்கு முன்னர், பென்டகன் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதியைப் பெற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சியின் செனட்சபை உறுப்பினர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.