முறிகள் மோசடி தொடர்பில் கைதான பிரமுகர்களுக்கு விளக்கமறியல்

by Staff Writer 25-03-2019 | 8:22 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பீ. சமரசிங்க, பேர்ப்பச்சுவல் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் 3 பணிப்பாளர்களும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முறிகள் மோசடி தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸின் தந்தையே ஜெப்ரி அலோசியஸ் ஆவார். இந்தநிலையில், பிணை நிபந்தனைகளை ஏற்று சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் திணைக்களத்துக்கு சென்று விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கு வழங்காமலோ அல்லது இடையூறு விளைவிக்கவோ இல்லை எனத் தெரிவித்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி விலைமனு சபையின் தலைவராக தமது தரப்பு செயற்பட்டாலும் அப்போதைய மத்திய வங்கி ஆளுநரான அர்ஜூன மகேந்திரனின் ஆலோசனைகள் மற்றும் கட்டளைகளுக்கும் அமைவாகவே அனைத்து அதிகாரிகளும் செயற்பட்டதாக, வழக்கின் 10 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பீ. சமரசிறி சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி நளீன் லந்துஹெட்டி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 40 வருட சேவையைத் தொடர்ந்து பீ. சமரசிறி 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஓய்வுபெற்றதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபருக்கு எதிராக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை கட்டளைச்சட்டத்தின் 56 ஆவது பிரிவுக்கு அமைவான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவானுக்கு உள்ளதாக பிரதம நீதவான் இதன்போது தெரிவித்துள்ளார். எனினும், முறிகள் மோசடியால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர்கள் இழைத்த மோசடி பாரதூரமானது எனவும் கொழும்பு பிரதம நீதவான் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கினால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதை கருத்தில்கொண்டு பிணை சரத்திற்கமைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்காது விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பீ. சமரசிங்க, பேர்ப்பச்சுவல் குழும நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர்களான புஷ்பமித்ர குணவர்தன, சித்ரா ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜ் சுரேந்திரன் ஆகியோர் இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.