தமது மகனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு

by Staff Writer 25-03-2019 | 8:36 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது மகன் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக, வந்தாறுமூலை - பலாச்சோலையைச் சேர்ந்த தம்பதியொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. மட்டக்களப்பு - வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த விஜயகாந்தன் செல்வராணி தம்பதியரின் மகன் கடந்த முதலாம் திகதி விபத்துக்குள்ளானார். மரக்கறி வியாபாரியான விஜயகாந்தன் தமது வாகனத்தை பின்னோக்கிச் செலுத்தியபோது அந்த எதிர்பாராத விபரீதம் நேர்ந்திருந்தது. இதன்பின்னர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 வயதான விதுலக்ஸன், பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். கடந்த முதலாம் திகதி அனுமதிக்கப்பட்ட விதுலக்ஸனுக்கு கடந்த 19ஆம் திகதி வரை சிகிச்சையளிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் அவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர். விதுலக்‌ஷன் அன்றைய தினம் உயிரிழந்ததுடன், சடலம் மறுநாள் கொண்டுவரப்பட்டு கடந்த 21ஆம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது. பலாச்சோலை விபுலாந்த வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்றுவந்த விதுலக்‌ஷன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவராவார். இந்தநிலையில், தமது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் நிலவுவதாக பெற்றோர் குற்றஞ்சாட்டுவதுடன், மருத்துவ அறிக்கைகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.கலாரஞ்சனியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, இந்த குற்றஞ்சாட்டு குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் தாம் விளக்கம் கோரியுள்ளதாகவும் விளக்க அறிக்கை தம்மிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை தாம் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் வைத்தியசாலையின் அவர் கூறியுள்ளார். இதேவேளை, மட்டக்களப்பு - சித்தாண்டி விநாயகர் கிராமம் விபுலாந்தர் வீதியில், 9 மாத குழந்தையொன்று நேற்று உயிரிழந்துள்ளது. 8 மாதங்களில் பிறந்த சஞ்சுஜன் எனப்படும் ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.