டொனால்ட் ட்ரம்ப் தப்பினார் - சதி செய்யவில்லை

டொனால்ட் ட்ரம்ப் தப்பினார் - சதி செய்யவில்லை

by Fazlullah Mubarak 25-03-2019 | 8:00 AM

Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற 2016 ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீடு இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தில் எவ்வித ஆதாரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்பின் குழுவினருக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் எவ்வித தொடர்புகளும் நிலவியமைக்கான சான்றுகள் இல்லை என தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் தொடர்பு பற்றி நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கையை சிறப்பு ஆணையத்தின் தலைவர் ரொபர்ட் முல்லர் சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையை தொகுத்து சட்டமா அதிபர் வில்லியம் பார், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக குற்றச்சாட்டு எதையும் முல்லரின் இந்த அறிக்கை பரிந்துரைக்கவில்லை என நீதித்துறை அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் ஆதரவாளர்கள் 6 பேர் மீதும், பல ரஷ்யர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றஞ்சுமத்தியிருந்தது. எதிர்வரும் நாட்களில் இந்த அறிக்கையின் முக்கிய தகவல்களைத் தெரிவிக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கின்றார். அமெரிக்காவின் துணைச் சட்ட மா அதிபர் ரோட் ரோசென்ஸ்டையினால் நியமிக்கப்பட்டு 22 மாதங்களாக நடைபெற்ற இந்த சிறப்பு ஆணையத்தின் விசாரணை முடிவுகளை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.