தொடரை முழுமையாகக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

சர்வதேச 20 க்கு 20 தொடரை முழுமையாகக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

by Staff Writer 25-03-2019 | 4:26 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரையும் தென்னாபிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்கா 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஜொஹனர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக நீஷா ஹென்ரிக்ஸ் 66 ஓட்டங்களைப் பெற்றார். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய டுவைன் ப்ரோடோரியஸ் 42 பந்துகளில் 77 ஓட்டங்களை விளாசினார். அணித்தலைவர் ஜியோன் போல் டுமினி ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல 22 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தார். அவர் ஆட்டமிழந்ததன் பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. தனஞ்சய டி சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், திஸ்ஸர பெரேரா ஆகிய நட்சத்திர வீரர்களால் 10 ஓட்டங்களை கடக்க முடியவில்லை. இலங்கை அணி 11.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இசுரு உதான 23 பந்துகளில் 36 ஓட்டங்களை விளாசி சற்று நம்பிக்கையளித்தார். எனினும், அவர் அன்டிலி புல்க்வாயோவின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழக்க தென்னாபிரிக்காவின் வெற்றி உறுதியானது. அணித்தலைவர் லசித் மலிங்க, அகில தனஞ்சய ஆகியோர் ஓட்டமின்றி ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 14.4 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.