இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான பணம் வேறொரு வங்கிக்கு மாற்றம்?

by Staff Writer 25-03-2019 | 9:56 PM
Colombo (News 1st) ஒளிபரப்பு உரிமத்துக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்குக் கிடைக்கவேண்டிய பாரிய தொகையை வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் தகவல் வெளியாகி இன்றுடன் 6 மாதங்களும் 15 நாட்களுக்கும் பூர்த்தியடைந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடாகவே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு பெருமளவு நிதி கிடைக்கின்ற அதேநேரம், அதற்கு அடுத்ததாக ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு நிதி கிடைக்கின்றது. எனினும், அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்குக் கிடைக்க​வேண்டிய பெருந்தொகை பணத்தை வேறொரு வங்கிக்கணக்குக்கு மாற்றப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் வெளிக்கொணரப்பட்டது. பாரிய தொகைகளை ஊதியமாகப் பெற்று தொழில்நுட்பப் பிரிவில் உயர் பதவிகளை வகிக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதான வழிநடத்தல் அதிகாரி ஆகியோர் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட்டுள்ளார்களா என்பது கேள்விக்கு வித்திட்டுள்ளது. இத்தகைய பாரிய நிதி பறிமாற்றல் தொடர்பிலான கொடுக்கல் வாங்கலை நிதிப்பிரிவு அதிகாரி மாத்திரம் தனியாக மேற்கொள்வதற்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான தகவல் பரிமாற்றங்கள் மின்னஞ்சல் ஊடாகவே இடம்பெற்றுள்ளன. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்காக கிடைக்கவேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் வேறொரு வங்கிக்கணக்குக்கு மாற்றப்படுவதற்கு முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடருக்குக் கிடைக்கவேண்டிய இறுதித் தவணை அமெரிக்க கணக்கொன்றுக்கு மாற்றப்படவிருந்தமை கண்டறியப்பட்டது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கிடைக்கவிருந்த 1,87,084.75 மில்லியன் அமெரிக்க டொலர், இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைக்கப்பெறவில்லை என ஒரு மாதமும் 10 நாட்களும் கடந்ததன் பின்னரே இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் அறிந்துகொண்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஆவணங்களில் முன்னாள் தலைவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் அதிகாரியும் கையொப்பமிட்டிருந்ததை இலங்கை கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தநிலையில், ஆம். அவர் வேலை செய்துள்ளார். முன்னாள் தலைவருக்கு அவர் வேலை செய்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். இவையனைத்தும் வெளிக்கொணரப்பட்டு 6 மாதங்களும் 15 நாட்களும் கடந்துள்ள நிலையிலும் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் அல்லது தற்போதைய நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் தவறியுள்ளமையும் சந்தேகங்கங்களை ஏற்படுத்துகின்றது.