அனுமதியின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் சட்ட நடவடிக்கை

by Staff Writer 25-03-2019 | 8:55 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக, இன்று (25ஆம் திகதி) முதல் மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உரிய அனுமதியின்றி மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நேரிட்டுள்ளதாக மின்சார சபையை ஒழுங்குபடுத்தும் அதிகாரமுள்ள மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பகல் வேளையில் 3 மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமுமாக நாளாந்தம் 4 மணித்தியால மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சார சபையின் அறிவித்தலுக்கு அமைய காலை 8.30 மணியிலிருந்து முற்பகல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை அல்லது 2.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரையிலான 3 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. அத்தோடு, மாலை 6.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்தநிலையில், மின்சார விநியோகத்தைத் துண்டிப்பதற்காக மின்சார சபை இதுவரை அனுமதியை பெற்றுக்கொள்ளவில்லை என மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்ற மின்சார விநியோகத் துண்டிப்புக்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவது தொடர்பில் இதுவரை ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறவில்லை என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரப்பதிவின் பணிப்பாளர் நளின் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த 18 ஆம் திகதி முதல் இதுவரையான நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான தகவல்களை ஆணைக்குழுவிடம் வழங்குமாறு நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு எண்ணியுள்ளதாக, நளின் எதிரிசிங்க மேலும் தெரிவித்துள்ளார். சம்பூர் போன்ற பகுதிகளில் மின் நிலையங்களை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டபோதே, இந்த வருடத்தில் இதுபோன்றதொரு நெருக்கடி நிலை ஏற்படலாம் என கூறியிருந்ததாக, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். வருடாந்தம் அதாவது 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒரு தடவை 500 மெகாவொட் மின்சாரத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியம் எனக் கூறிய அவர், மட்டுப்படுத்தப்பட்டளவில் உள்ள நீர் மின் நிலையங்கள் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நுரைச்சோலையை செயற்படுத்துவதன் மூலம் இதனை ஈடு செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அதிக விலைக்குத் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்து சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்வதே, இருளிலிருந்து மீள்வதற்கான மின்சார சபையிடமுள்ள பதிலாகும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். இவ்வாறு மின்சாரத்தைத் துண்டிப்பதற்கு மின்சார சபையொன்று தேவையா? மின்சார நெருக்கடிக்கு தீர்வாக இறக்குமதி செய்யப்பட்ட பிறப்பாக்கிகள் நிலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் அடுத்த வருடத்திலாவது மின்சார சபைக்கு உரிய திட்டம் உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தநிலையில், தற்போதைய மின்சார நெருக்கடி தொடர்பில் அமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
தமது நண்பர்களின் தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரட்சியே அதற்கு தகுந்த காலம். ஏனெனில் நீர் இல்லை. ஆகவே நீர் மின்சாரம் இல்லை. தட்டுப்பாட்டினை நிவர்த்திசெய்வதற்கு தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அவர்கள் பணத்தை ஈட்டுகின்றனர். மின்சார சபைக்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு இரகசியமானது அல்ல
என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார கருத்துத் தெரிவித்துள்ளார்.
4 வருடங்களாக இந்த அமைச்சரவை மின்சார திட்டமொன்றை அங்கீகரிக்கவில்லை. காரணம் என்ன? தரகர் பணம் பெறுவதற்கான போட்டியே உள்ளது. கொழும்பில் இழுபறிநிலை உள்ளது. இவ்வாறு நடந்தால் திடீரென மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு நேரிடும். அந்த சந்தர்ப்பத்தில் அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு நேரிடும். அப்படியான அரசாங்கமொன்று எதற்காக?
என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனைய செய்திகள்