Colombo (News 1st) நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி பேசிய கருத்து சர்ச்சையாகியதைத் தொடர்ந்து, தி.மு.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய கருத்து பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக திரையுலகத்தினர் பலரும் தமது கண்டனங்களை வௌியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், ராதாரவி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பேச்சு தொடர்பில் விக்னேஷ் சிவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்த நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடாது என தி.மு.க. தெரிவித்துள்ளது.
நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியதோடு, கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருவதால், தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைப்படுவதாக, தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பின்போது,
''எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அவற்றையெல்லாம் கடந்தும் நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.
நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் இன்னொன்றில் சீதாவாகவும் நடிக்கின்றார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர். விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது, பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்''
என நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.