நாளாந்தம் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

நாளாந்தம் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை (UPDATE)

by Staff Writer 24-03-2019 | 7:21 AM
Colombo (News 1st)

கடந்த சில நாட்களாக முன் அறிவித்தல் இன்றி, நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மின் துண்டிக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளாந்தம் காலையிலும் மாலை வேளையிலும் சில மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. காலை எட்டு முப்பது முதல் 11.30 வரையும், அல்லது முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 02.30 வரையான காலப்பகுதியிலும், பிற்பகல் 02.30இலிருந்து மாலை 05.30 வரையான மூன்று மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இரவு வேளையில் மாலை 06.30இலிருந்து 07.30வரையும் அல்லது 07.30முதல் 08.30வரை அல்லது 08.30இலிருந்து 09.30 வரை ஒரு மணித்தியாலம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. நாட்டின் 50 கிரீட் உப மின் நிலையங்கள் செயற்படுத்தப்படுவதுடன், அந்த உப மின் நிலையங்களின் கால வரையறைக்கு ஏற்ப மின்சாரம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் பகல் வேளையில் 2350 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி நிலவுகின்றபோதிலும், 1950 மெகாவோட் மின்சாரத்தை மாத்திரமே தற்போதைக்கு வழங்க முடியும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். நாளாந்தம் இரவு வேளையில் 2600 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி நிலவுகின்றபோதிலும், 2300மெகாவோட் மின்சாரத்தையே வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இவ்வாறு மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சக்தி அமைச்சு இதுவரை அனுமதி வழங்கவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்தார். மின்சாரத்திற்கு அதிக கேள்வி நிலவுகின்றபோது, தமது தனிப்பட்ட மின் பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு, பிரதான தொழில்சாலைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கௌரவ அமைச்சரே! எம்பிலிபிடிய எஸ் பவர் உள்ளிட்ட தனியார் மின் உற்பத்தி நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் கைச்சாத்திட்ட, மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையின் காலம் நிறைவடைந்ததுடன் அதனை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கான யேசானயை அமைச்சரவையில் நீங்களே சமர்ப்பித்தீர்கள். அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்து மூன்று வருடங்களும் கடந்துவிட்டன, எனினும் அதனை கருத்திற்கொள்ளாமல் மின்சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட உள்ளிட்ட சிலரின் தேவைக்காக இன்றும் அந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யப்படுகின்றது. அவ்வாறான சில நிறுவனங்களின் பணிப்பாளர் சபையில், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் அங்கம் வகிக்கின்மையும் இரகசியமல்ல ஆகவே, இந்த நிலைமையை சீர்செய்யும் பொறுப்பு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் உங்களுக்குள்ளது. அதனை செய்யாதவரை மின்சாரத் துறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை ஞாபகப்படுத்துகின்றோம்.    

ஏனைய செய்திகள்