புத்தளம் ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

புத்தளம் ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 23-03-2019 | 3:29 PM
Colombo (News 1st) அருவக்காடு கழிவகற்றல் திட்டத்திற்கு பிரதேச மக்கள் நேற்று (22) புத்தளத்தில் கூடி எதிர்ப்பு வௌியிட்டமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜனாதிபதி புத்தளம் நகருக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டமானது திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தௌிவாவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இதன் பிரகாரம், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். நீதிமன்ற உத்தரவை மீறியமை, அமைதியின்மையுடன் செயற்பட்டமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயத்துடன் தொடர்புடையவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இதேவேளை, நேற்றைய தினம் எதிர்ப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.