ஊடக ஒடுக்குமுறை தற்போதைய ஆட்சியிலும் மாறவில்லை என்கிறார் சரவணபவன்

by Bella Dalima 23-03-2019 | 8:24 PM
Colombo (News 1st) ஊடகங்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த விடயங்களில் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கும் தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மஹிந்தவின் ஆட்சியில் நடந்த ஊடக அடக்குமுறையும் ஊடகவியலாளர்கள் படுகொலையும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களும் இந்த ஆட்சியில் இல்லை என கூறினாலும், குற்றவாளிகளைத் தப்பவிட்டு அச்சத்தையும் சுய தணிக்கையையும் தொடரச் செய்ததன் மூலம் மஹிந்த அரசுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாகப்படவில்லை என ஈ.சரவணபவன் கூறினார். ஊடகவியலாளர்களை படுகொலை செய்த, ஊடக நிறுவனங்களைத் தாக்கி சேதப்படுத்திய ஒரேயொரு குற்றவாளியையாவது கடந்த 4 ஆண்டுகளில் இந்த அரசாங்கம் பிடித்ததா என அவர் சபையில் கேள்வி எழுப்பினார். கொலைகள் குறித்து விசாரணை நடத்த முடியவில்லை என்றால், நீங்கள் கொலையாளிக்கு உடந்தையானவர்கள், கொலைகாரக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்று தான் அர்த்தம் எனவும் ஈ.சரவணபவன் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு நீதி வழங்க முடியாத ஆட்சியாளர்கள், ஊடகங்களாலும் அவற்றின் செய்தி அறிக்கையிடலாலும் தாம் பாதிக்கப்படுவதாகக் கூச்சலிட்டு, கறுப்பு ஊடகங்கள் என பெயரிட்டு வெறுப்பைக் காரி உமிழ்வதில் என்ன நியாயம் இருக்கிறது எனவும் அவர் வினவினார்.