இலங்கை தோல்வி: இசுரு உதான அபார ஆட்டம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20: தென்னாபிரிக்கா வெற்றி, இசுரு உதான அபார ஆட்டம்

by Staff Writer 23-03-2019 | 5:38 PM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் தென்னாபிரிக்கா 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா சார்பாக நீசா ஹென்ரிக்ஸ் 65 ஓட்டங்களையும் Van der Dussen 64 ஓட்டங்களையும் பெற்றனர். அதிரடியாக விளையாடிய ஜியோன் போல் டுமினி 17 பந்துகளில் 33 ஓட்டங்களை விளாசினார். தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களைப் பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்களை தாரைவார்த்தது. முதல் 7 விக்கெட்களும் 83 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட இலங்கை அணி தோல்வியின் பிடிக்குள் சிக்கியது. எட்டாம் இலக்கத்தில் களமிறங்கிய இசுரு உதான 33 பந்துகளில் அரைச்சதமடித்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 32 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், அந்த ஓவரில் இசுரு உதான 2 சிக்சர்களை அடித்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார். எனினும், புதுமுக வீரரான லுதோ சிபாம்லா கடைசி ஓவரில் 16 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து தென்னாபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார். இறுதி வரை களத்தில் நின்று வெற்றிக்காக போராடிய இசுரு உதான 6 சிக்சர்கள் 8 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பெற்றார். இதன் மூலம் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் எட்டாம் இலக்கத்தில் களமிறங்கி, அதிகூடிய ஓட்டங்களை விளாசிய வீரராகவும் முதல் இலங்கை வீரராகவும் இசுரு உதான பதிவானார். இதற்கு முன்னர் எட்டாம் இலக்கத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரராக அயர்லாந்தின் சிமி சிங் பதிவாகியிருந்ததோடு, அவர் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்கா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் கைப்பற்றியது.