by Bella Dalima 22-03-2019 | 8:51 PM
Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.
ஊழியர் சேமலாப நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறியதன் பின்னர், நாட்டில் உழைக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்தாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட மூலதன இலாபம் 2993.6 மில்லியன் ரூபா. எனினும், 2016 ஆம் ஆண்டு 4714 மில்லியன் ரூபா பெறப்பட்டது. இதன் அடிப்படையில், 2017 ஆம் ஆண்டு 36.5 வீதம் குறைவாகவே இலாபம் பெறப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
வர்த்தகம் என்ற வகையில், சில வருடங்களில் பாரிய இலாபம் கிடைப்பதனால் பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்யப்படுகிறது. சில வருடங்களில் நட்டம் ஏற்படுகிறது. பங்குகளின் பெறுமதியுடனேயே இலாபம் கிடைக்கும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்தார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடியின் பின்னர் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தை மீளப் பெற்றுக்கொண்டனர். ஆகவே, நம்பிக்கையில்லாத பங்குச்சந்தையில் உழைக்கும் மக்களின் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்றே மக்கள் கூறுவதாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த விடயத்தை சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.