அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இல்லாததால் உதவியற்ற நிலையில் புத்தளம் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 22-03-2019 | 7:32 PM
Colombo (News 1st) நாட்டிற்காக ஒன்றிணைவோம் திட்டத்தின் புத்தளம் மாவட்ட நிறைவு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. மக்களுக்கான அதிகபட்ச பொதுச்சேவைகள் மூலம் அதன் பிரதிபலனைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறைசார் பல்வேறு திட்டங்களில் நிலவும் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வுகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு ஏற்ப இந்தத் திட்டம் எதிர்காலத்தில் ஏனைய மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ளது. இந்நிகழ்வின் போது, புத்தளத்தில் ஏதேனுமொரு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மாவட்டங்களுக்கு வரையறையான அபிவிருத்தித் திட்டங்கள் கட்டாயம் தேவைப்படுவதாகவும் புத்தளத்தைப் பொருத்தமட்டில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் இல்லாததால், உதவியற்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.