வில்பத்து காடழிப்பிற்கு எதிரான வழக்கு பரிசீலிக்கப்படவுள்ளது

by Staff Writer 22-03-2019 | 3:30 PM
Colombo (News 1st) வில்பத்து காடழிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் மாதம் 28 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. வில்பத்து காட்டில் விலத்திக்குளம் பகுதியை அழித்து அங்கு மக்களை குடியேற்றுவதற்கு எதிராக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு மற்றும் ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர், காணி ஆணையாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வில்பத்து காட்டின் பெரும்பகுதி தற்போது அழிக்கப்பட்டுள்ளதால், இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் வில்பத்து காடு பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கும் எனவும் முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்களை ஆராய்ந்த நீதிபதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளார்.