தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முகவராக செயற்படுகிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முகவராக செயற்படுகிறது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2019 | 9:15 pm

Colombo (News 1st) இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க விடயங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேலும் இரண்டு வருட கால நீடிப்பு கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நேற்று (21) நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கருத்துத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இரண்டு வருடங்களுக்கு பிரயோசனமில்லாத மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.

இச்செயற்பாடானது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற பெயரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க முடியாது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடைய முகவர்களாக செயற்படுகின்ற நிலை தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கால நீடிப்பு என்பது நீதி மறுக்கப்படுவதற்கு சமம் எனவும் சர்வதேச தீர்ப்பாயத்திற்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் எனவும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

சர்வதேச சமூகங்கள் எல்லாம் சேர்ந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொண்டு, அதை கொண்டு நடத்தும்படி இலங்கைக்கு பரிந்துரை செய்திருப்பது ஏமாற்றத்தை அளித்திருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராசா தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதில் சொல்ல வேண்டும் என சட்டத்தரணி சுகாஸ் வலியுறுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்