ஈராக்கின் டைகரிஸ் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து

ஈராக்கின் டைகரிஸ் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: உயிரிழப்பு 94 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 22-03-2019 | 4:32 PM
ஈராக்கின் மொசுல் நகரில் டைகரிஸ் ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. ஈராக்கிலுள்ள குர்திஷ் இன மக்களின் புத்தாண்டு நேற்று (21) கொண்டாடப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சுற்றுலாத் தீவொன்றுக்கு செல்வதற்காக டைகரிஸ் ஆற்றினூடாக சுமார் 200 பேர் படகில் பயணித்துள்ளனர். இதன்போது, படகு திடீரென கவிழ்ந்ததில் 61 பெண்கள் மற்றும் 19 குழந்தைகள் உட்பட 94 பேர் உயிரிழந்துள்ளதாக ஈராக்கின் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. 55 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. படகில் பயணித்த பெரும்பாலான பயணிகளுக்கு நீச்சல் தெரியாது எனவும் பாதுகாப்பு அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் அப்தெல் அப்துல் மஹ்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 50 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் சுமார் 200 பேர் பயணித்துள்ளமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.