முறிகள் தொடர்பான தடயவியல் கணக்காய்வு ஆரம்பம்

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அடுத்த மாதம் ஆரம்பம்

by Staff Writer 21-03-2019 | 10:34 AM
Colombo (News 1st) மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தடயவியல் கணக்காய்வை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்காக தடயவியல் கணக்காய்வை நடாத்தும் நிறுவனத்துடன் அடுத்த வாரமளவில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என, இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீடு குறித்து, 5 தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, கட்டாயமாக முன்னெடுக்கவேண்டியுள்ள ஆறாவது தடயவியல் கணக்காய்வு தொடர்பில், அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்விற்கான கொள்கைவகுப்பு குழுவின் பரிந்துரைக்கு அமைய, இந்தியாவிலுள்ள M.S.B.D.O - INDIA மற்றும் M.S.K.P.M.G. - SRILANKA ஆகிய இரு நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முறிகள் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. முறிகல் கொடுக்கல் வாங்கலில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் முன்னெடுக்கப்பட்ட அனைத்து கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்