நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு எதிரான வழக்கு விசாரணை

நிஷாந்த முத்துஹெட்டிகம உள்ளிட்ட ஐவருக்கு எதிரான வழக்கு விசாரணை

by Staff Writer 21-03-2019 | 7:03 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம உள்ளிட்ட பிரதிவாதிகள் ஐவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தென் மாகாண காலி மேல் நீதிமன்ற நீதிபதி W.P.S. நிஷங்க இன்று உத்தரவிட்டுள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், முதலாவது பிரதிவாதியான நிஷாந்த முத்துஹெட்டிகமவின் கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அரச தரப்பு சட்டத்தரணி ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின் போது மன்றில் தெரிவித்திருந்தார். இதனால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கைவிரல் அடையாள பதிவாளர் அலுவலகத்தின் அதிகாரியொருவரை அழைப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருந்தார். இதன் பிரகாரம், கைவிரல் அடையாள பதிவாளர் அலுவலகத்தின் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர், கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்வதற்கு இன்று வருகை தந்தார். கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஒருவரை கடத்திச்சென்று உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்