நியூஸிலாந்தில் தன்னியக்க துப்பாக்கிகளுக்குத் தடை

நியூஸிலாந்தில் தன்னியக்க துப்பாக்கிகளுக்குத் தடை - பிரதமர் அறிவிப்பு

by Staff Writer 21-03-2019 | 12:44 PM
Colombo (News 1st) நியூஸிலாந்தில் அனைத்து வகையிலான தன்னியக்க துப்பாக்கிகளையும் தடை செய்யவுள்ளதாக, அந்நாட்டு பிரதமர் ஜெசின்டா ஆர்டேர்ன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார். குறித்த தடைச்சட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியூஸிலாந்து க்ரைஸ்ட்சேர்ச் பகுதியிலுள்ள இரு வழிபாட்டுத்தலங்களில் கடந்த வாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், இதன்போது கொல்லப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். க்ரைஸ்சர்ச்சில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, 10 நாட்களில் நாட்டின் துப்பாக்கி பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 6 நாட்களில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் தன்னியக்க துப்பாக்கிகளே பயன்படுத்தப்படுவதாகவும் அதற்கான தடை விதிக்கப்படும் எனவும் பிரதமர் ஜெசின்டா அறிவித்துள்ளார். இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறிய பிரதமர், துப்பாக்கிதாரியின் பெயரைக் கூட உச்சரிக்கமாட்டேன் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.