இத்தாலியில் 51 மாணவர்களுடன் பஸ் கடத்தல்

இத்தாலியில் 51 மாணவர்களுடன் கடத்தப்பட்ட பஸ்

by Chandrasekaram Chandravadani 21-03-2019 | 7:35 AM
Colombo (News 1st) இத்தாலியில் பாடசாலை மாணவர்கள் 51 பேருடன் பயணித்த பஸ் ஒன்று சாரதியால் கடத்தப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இத்தாலியின் மிலன் நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. பஸ்ஸுக்குத் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ்ஸின் பின்பக்க ஜன்னல் வழியாக அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 14 மாணவர்கள் மட்டும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் செனகலைச் சேர்ந்த, இத்தாலிய குடியுரிமை பெற்ற 47 வயதான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். எவரும் உயிர் பிழைக்க மாட்டார்கள் என அந்த சாரதி கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் உயிர் தப்பியமை அதிசயம் என கூறியுள்ள மிலன் நகர சிரேஷ்ட சட்டத்தரணி பிரான்செஸ்கோ கிறீகோ, இதுவொரு படுகொலைச் சம்பவமாகியிருக்கும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த சாரதி இத்தாலியின் புலம்பெயர் கொள்கை தொடர்பில் கோபமுற்றிருந்ததாக கடத்தப்பட்ட பஸ்ஸிலிருந்த ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   அதேநேரம், மத்திய தரைக் கடலில் இடம்பெறும் உயிரிழப்புகளை நிறுத்துமாறு அச்சாரதி சத்தமிட்டதாகவும் செய்திகள் வௌியாகியுள்ளன. இரு வகுப்புகளைச் சேர்ந்த பதின்ம வயது மாணவர்களையும் அவர்களின் பாதுகாவலர்களையும் பாடசாலையிலிருந்து உடற்பயிற்சிக்கூடத்திற்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலையில், பஸ் வேறொரு வழியாக பயணித்துள்ளது. அடுத்த 40 நிமிடங்களில் இந்த கடத்தல் விவகாரம் தெரியவந்துள்ளது. பின்னர், பஸ்ஸின் சாரதி கத்தியைக் காட்டி மாணவர்களை மிரட்டிய சந்தரப்பத்தில், அங்கிருந்த மாணவர் ஒருவர் பெற்றோருக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அம்மாணவரின் பெற்றோர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பின்னர் பஸ்ஸைத் தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸாருக்கு சற்றுநேரம் எடுத்த நிலையில், பொலிஸாரின் வாகனங்களை அந்த பஸ் மோதியுள்ளது. பஸ் நிறுத்தப்பட்டதும் கீழே குதித்த பஸ் சாரதி பஸ்ஸுக்குத் தீ வைத்துள்ளார். இதேவேளை, பஸ்ஸிலிருந்து பெட்ரோல் சிந்தியவண்ணம் இருந்ததாகவும் பொலிஸார் பஸ்ஸின் ஜன்னல்களை உடைத்து மாணவர்களை மீட்டுக்கொண்டிருந்ததாவும் இந்த நிலையில் பஸ்ஸில் தீப்பற்றியதாகவும் இத்தாலிய செய்திகள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சாத்தியமான அனைத்து வகையிலும் விசாரணைகளை மேற்கொள்வதாக மிலன் நகர சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.