அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் வழக்கில்லை

அர்ஜூன மகேந்திரன் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை: சுஜீவ சேனசிங்க

by Bella Dalima 21-03-2019 | 8:32 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் முறிகள் மோசடி தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிடம் கேள்வி எழுப்பினர். மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில், சிங்கப்பூரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் சுஜீவ சேனசிங்கவிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பது தொடர்பில் தமக்குத் தெரியாது என சுஜீவ சேனசிங்க பதிலளித்தார். நீதிமன்றம் அவ்வாறு அந்நபரைக் கோரினால் சர்வதேச பொலிஸார் ஊடாக அரசாங்கத்திற்கு அதனை செய்ய முடியும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார். மேலும், இந்த விடயம் தொடர்பில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்னும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாதுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், விடயத்துடன் தொடர்புடைய தனி நபர்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தேடி வருவதாகவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.