சிறுபான்மை மக்களின் ஆதரவு கட்டாயமாக கிடைக்கும்

சிறுபான்மை மக்களின் ஆதரவு கட்டாயமாக கிடைக்கும்: கோட்டாபய நம்பிக்கை

by Staff Writer 20-03-2019 | 9:03 PM
Colombo (News 1st) நாராஹேன்பிட்டியிலுள்ள விகாரையொன்றில் இன்று பிற்பகல் நடைபெற்ற வைபவமொன்றை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ஸ, பொது ஜன பெரமுனவின் அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறினார். தன்னிடமுள்ள சிறப்புகள் காரணமாகவே மக்கள் தன்னை கோருவதாகவும் அவர் தெரிவித்தார். யுத்தத்திற்கு தலைமைத்துவம் வழங்கியதை விட யுத்தத்திற்கு பின்னர் வழங்கிய தலைமைத்துவத்தை மக்கள் பெரிதும் வரவேற்பதாக கோட்டாபய ராஜபக்ஸ கூறினார். குறிப்பாக தாம் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பு நகரை ஆசியாவிலேயே துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் நகராக மாற்றுவதற்கு செயற்பட்டதன் மூலம் மக்கள் தனது செயலாற்றலை புரிந்துகொண்டதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். சிறுபான்மை மக்களின் ஆதரவும் கட்டாயமாக தனக்கு கிடைக்கும் என கோடாபய ராஜபக்ஸ நம்பிக்கை வெளியிட்டார். இராணுவத்தினரின் சேவை தொடர்பிலான உரிய புரிந்துணர்வு சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படாமை துரதிர்ஷ்டம் எனவும் அவர் தெரிவித்தார்.